அன்புள்ள சனீசுவரனார்க்கு... எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜனவரி 17 அன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம். புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல. உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள். உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள். புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள். இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் செய்யாதீர்கள். ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள். வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள். அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்...