1.பாத்திரங்களைக் கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு பயன்படுத்தாமல் தனி ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பிக் கழுவுவோம்.
2.பழங்களையோ அல்லது காய்கறிகளையோ கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு அலசும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதைக்கொண்டு அலசுவோம்.
3. பல் துலக்கும்போதும், முகம் கழுவும்போதும் குழாயைத் திறந்துவிட்டுப் பயன்படுத்தாமல், ஒரு பாத்திரத்தில் நிரப்பிச் சிறுகச் சிறுகப் பயன்படுத்துவோம்.
4. குளிக்கும்போது நீர்த்தெளிப்பான் (ஷவர்) முறையில் குளிக்காது, வாளிகளில் நீரை நிரப்பிக் குளிப்போம். முடிந்தளவுக்கு ஒரு வாளி நீரில் குளியலை முடித்திட முயல்வோம்.
5. துணி துவைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தினால் இயந்திரம் முழுவதும் துணிகளை நிரப்பிய பிறகு பயன்படுத்துவோம்.
6. அன்றாடம் துணிகளைத் துவைக்கும்போது கூடுதலான நீர் செலவாகும். அதனால், முடிந்தமட்டும் ஒரே முறையாக எல்லாத் துணிகளையும் துவைத்து நீரைச் சிக்கனப்படுத்துவோம்.
7. துணி துவைத்த பிறகு மீதமிருக்கும் நீரை வீணாக்காது அதைக் கழிப்பறைகளில் ஊற்ற பயன்படுத்துவோம்.
8. முடிந்த மட்டும் மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்தாது இந்நாட்டு முறை கழிப்பறைகளைப் பயன்படுத்துவோம். மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்துகிறபட்சத்தில், விசையின் மூலம் (FLUSH) நீரைப் பாய்ச்சாது வாளியின் மூலம் நீரை ஊற்றிச் சுத்தம் செய்வோம்.
9. ஒரு சொட்டுநீர்கூட வீணாகாது நீர்க்குழாயை நன்றாக மூடுவோம். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம்.
10. நீர்க்குழாய் உபகரணங்கள் கசிந்தால் அவற்றின் பழுதை நீக்குவோம் அல்லது வேறு உபகரணத்தைப் புதிதாகப் பொருத்துவோம்.
11. உணவு உண்ணுவதற்கு முன்னும், பின்னும் கைகளைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது பாத்திரத்தின் உதவியுடன் கழுவுவோம்.
12. வாகனங்களைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது ஈரத்துணியை வைத்துத் துடைத்துச் சுத்தம் செய்வோம்.
13. மின் இயந்திரத்தின் மூலம் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றுவதாக இருந்தால், எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் வரை நீரேற்றிவிட்டு மின் இயந்திரத்தை அணைத்துவிடுவோம். இதன்மூலம், அத்தொட்டிகளிலிருந்து நீர் கொட்டி வீணாவதைத் தடுக்கலாம்.
14. நீரின் சிக்கனத்தை மிக நன்றாக உணர்ந்திருக்கிற இத்தருணத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நமது சுற்றத்தார், உறவுகள் என யாவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலம் நீர் வீணாவதைத் தடுப்போம்.
மேலே கூறப்பட்டிருப்பவற்றை ஒவ்வொருவரும் அவசியம் பின்பற்றுங்கள். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஒத்துழையுங்கள். அதுகுறித்த கருத்துகளை எல்லோரிடமும் கொண்டு போய்ச் சேருங்கள். நிச்சயமாக, இக்கடினச் சூழலையும் நம்மால் கடக்க முடியும். ஆகையினால், நம்பிக்கையோடும், விழிப்போடும் நாள்களை நகர்த்துங்கள். இவ்வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்
Comments
Post a Comment